சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மூலம் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீரை வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதிசெய்யவும் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் திருத்தச் சட்டமானது 02.01.2023 அன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதனை செயல்படுத்த ஏதுவாக சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே குறிப்பிடபட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமம் பெறாத கழிவுநீர் லாரி உரிமையாளர்களும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க அஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.