கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பப்ஜி ஆப்!

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளதால் பப்ஜி பிரியர்களின் நிலையோ சொல்லி மாள முடியாமல் இருந்து வருகின்றது.

 

பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் என அனைவரின் உலகமாய் இருப்பது பப்ஜி என்னும் ஆன்லைன் கேம்தான். இந்த ஆன்லைன் கேமினை துவக்கத்தில் பொழுதுபோக்காக துவக்குவோர், ஓரிரு நாட்களில் இதன் வெறித்தனமான பிரியர்களாக ஆகி விடுகின்றனர்.

ஒரு நாளின் 20 மணி நேரத்திற்கும் மேலாக பப்ஜி விளையாட்டினை விளையாடியவர்களும் உண்டு. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ், ஆங்காங்கே உடல் நலம் பாதிப்பு, உயிர் இழப்பு என கேள்விப்பட்டாலும் பப்ஜி பிரியர்களோ இதனால் பயந்தபாடில்லை.

சமூக ஆர்வலர்கள் இதுகுறித்த கண்டனங்களை வைத்த நிலையில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

அதிலும் இந்த ஊரடங்கு காலத்தில் பல மொபைல்களில் மாற்றி மாற்றி என பப்ஜி பிரியர்கள் பப்ஜி விளையாடி பல விதமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. சமீபத்தில் ஒரு 11 வயது சிறுவன் உணவு, தண்ணீர் இல்லாமல் விளையாடி உயிர் இழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு நற் செய்தியாக இந்தியாவில் பப்ஜி உட்பட 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் தடை உத்தரவிற்குப் பின்னர், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளதால் பப்ஜி பிரியர்களின் நிலையோ சொல்லி மாள முடியாமல் இருந்து வருகின்றது.

From around the web