சென்னையில் 5 ஆவது நாளாகத் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்: முதல்வர் தலையிடுவாரா?

ஐந்தாவது நாளாக சென்னை டிபிஐ வளாகம் முன் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக முதல்வர் தலையிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து போராட்டம் செய்து வரும் ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் இரண்டாயிரத்தும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நான்காவது நாளில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து அதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் நேரடியாக தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.