சமீபகாலமாகவே இந்திய சினிமாவில் உண்மை சம்பவம் மற்றும் பயோபிக் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி மற்றும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பட்டியலில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜின் பயோபிக் படம் தான் அது. சபாஷ் மித்து என்ற பெயரில் தயாராகியுள்ள இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை டாப்ஸி நடித்துள்ளார்.
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வயாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். தற்போது சபாஷ் மித்து படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டிவிஸ்ட் என்னவென்றால் அதே நாளில் சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படமும் ரிலீசாக உள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சூர்யாவிற்கு போட்டியாக அதே நாளில் டாப்ஸி படமும் வெளியாக உள்ளது.
சபாஷ் மித்து பயோபிக் படமாக உருவாகி உள்ளது. அதேசமயம் எதற்கும் துணிந்தவன் படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.