பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்

Published:

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த விவகாரத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று வட மாநிலத்தவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 மாணவர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில், மாநகர கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், தாம்பரம், பள்ளிக்கரணை துணை ஆணையர்கள் தலைமையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது, இதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றி அமைந்துள்ள 500க்கும் மேற்பட்ட விடுதிகள், வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 19 மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து அரை கிலோ கஞ்சா, போதை சாக்லேட் 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி, பாங்கு 5, புகை பிடிக்கும் பானை 1, குட்கா 7, குட்கா தூள் 6 ஆகியவற்றை பறிமுதல் செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா, நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்தார்கள். தொடர்ந்து செல்வமணி அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் 30க்கும் அதிகமான மாணவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரவுடி செல்வமணிக்கு கஞ்சா சாக்லேட் சப்ளை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தாபா உரிமையாளர் ஒருவரையும் போலீசார் அதிரடியாக கைதாகி உள்ளனர். அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்படும் கஞ்சா சாக்லேட்டை கடத்திக் கொண்டு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் உறுதியானது. மேலும் அவரிடமிருந்து பட்டா கத்திகள், கஞ்சா சாக்லேட் ஆகியவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று வட மாநிலத்தவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 மாணவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11 கல்லூரி மாணவர்களையும் அவர்களின் சொந்த பிணையில் விடுவித்தார். மேலும், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநிலத்தைச் சார்ந்த மகேஷ்குமார் (29), சுனில்குமார் (29), டப்லு (23) ஆகிய மூன்று பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் உங்களுக்காக...