அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published:

சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர் நந்தகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறை செயலர் நந்தகுமார் அனைத்து துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கை வழக்குளை கையாள்வதில் சில தவறுகள் செய்வது அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இதில் குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை முடித்துவைப்பதில் தாமதம், ஒழுங்கு நடவடிக்கையின் படியான தண்டனைகளை அமல்படுத்தாதது, மேல்முறையீட்டு வழக்குகளில் அரசு மற்றும் , டிஎன்பிஎஸ்சி கோரும் முக்கியமான ஆவணங்களை தயாரித்து தராமல் இருப்பது போன்றவை முக்கியமான தவறுகளாக கண்டறியப்பட்டிருக்கிறது..

இந்த தவறுகளை தவிர்க்கும் வகையில், அரசு ஆய்வு செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, விளக்கம் கோரும் வகையில் வழங்கப்படும் 17 ஏ மற்றும் குற்றச்சாட்டு தொடர்பான 17 பி சார்ஜ் ஆகியவற்றுக்கு பதிலளிக்க 15 நாட்கள், விளக்கத்தை பெற்று ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க 30 நாட்கள் என அரசு நிர்ணயம் செய்துள்ளது..

அதேபோல், விசாரணை அதிகாரி நியமனத்துக்கு 7 நாட்கள், விசாரணையை முடித்து, அறிக்கை அளிக்க 30 நாட்கள், அறிக்கையை ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி முடிவெடுக்க 10 நாட்கள், நடவடிக்கை தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 15 நாட்கள், டிஎன்பிஎஸ்சியின் கருத்தைப் பெற 30 நாட்கள், இறுதி உத்தரவு அரசுத்துறை அளவில் என்றால் 30 நாட்கள், அரசு தவிர்த்த பிற துறை என்றால் 7 நாட்கள் என கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன்படி 17 ஏ குற்றச்சாட்டு என்றால் 85 நாட்களுக்குள்ளும், 17 பி குற்றச்சாட்டு என்றால் 167 நாட்களுக்குள்ளும் விசாரணையை அரசு துறை தலைவர்கள் முடிக்க வேண்டும். மேல்முறையீடு மற்றும் மறு ஆய்வு என்றால் 6 மாதத்துக்குள் நிச்சயம் நிறைவு செய்ய வேண்டும். ஊழல் தடு்ப்பு கண்காணிப்புக்குழு விசாரணை அல்லது தீர்ப்பாய விசாரணை என்றால் ஓராண்டுக்குள் முடித்து, அடுத்த 4 மாதங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பித்தல் கட்டாயமாகும்.

மேலும், ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, அனைத்து துறைகளின் செயலாளர்களும், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில், டிஎன்பிஎஸ்சியுடன் இணைந்து, தேவையான ஆவணங்களை தயாரித்து அறிக்கைக்கு முழு வடிவம் அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், தண்டனை விதிக்கும் போது, பணியாளரின் ஊதிய உயர்வு தொடர்பான விஷயத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். இதில் எவ்வித தவறும் நேரக்கூடாது. தலைமைச்செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளின் தலைவர்களும், இதுதொடர்பாக, தன் கீழ் பணியாற்றும் ஒழுங்கு நடவடிக்கை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” இவ்வா கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...