தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தை ஏப்ரல் மாதம் அண்ணாமலை தொடங்க உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் , அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜகவின் 66 மாவட்ட தலைவர்கள் உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய பாஜக துணைத்தலைவர் – நாராயணன் திருப்பதி, மாநில நிர்வாகிகள் , மாவட்ட தலைவர் கூட்டத்தில் , ஏப்ரல் மாதம் முதல் அண்ணாமலை 471 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து ஆலோசித்தோம்.
தமிழகத்திற்கும் , கட்சிக்கும் பயன்தரும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைய உள்ளது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் தலைமை அறிவிக்கும் , இதுவரை எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் எங்களது முடிவை அறிவிப்போம்.
பாஜக தேசிய கட்சி என்பதால் தேசிய தலைமைதான் கூட்டணி குறித்து அறிவிக்க முடியும். பாஜக உட்பட எந்தவொரு கட்சியும் தேர்தலில் போட்டியிட விரும்பத்தான் செய்வார்கள் , ஆனால் சூழல் , கூட்டணி பற்றி யோசித்து முடிவு செய்வோம். ஈரோடு கிழக்கில் போட்டியிட பாஜகவில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் யார் மனமும் புண்படாத வகையில் எங்களது முடிவு அமையும். நாங்கள் பண்பட்ட கட்சி , யாரையும் புண்பட வைக்கமாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஈரோடு கிழக்கில் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார்.
ஓ. பன்னீர்செல்வம் அணி எங்களுக்காக காத்திருப்பதாக கேட்கிறீர்கள் , அவர்கள் காத்திருக்கட்டும்..அதனால் என்ன. காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. திமுக கூட்டணியினர் இடைத்தேர்தலில் பணத்தை வாரி இரைக்க தயாராக உள்ளனர் எனக்கூறினார்.