தமிழ்த்திரை உலகில் 3 பாகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்ட படங்கள் – ஒரு பார்வை

தமிழ்சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வர ஆரம்பித்து விடும். ரசிகர்கள் படத்தை வெகுவாக ரசிக்கிறார்கள் என்றால் 3ம் பாகமும் வந்து விடும். அப்படி 3 பாகங்களும் வெளியாகி படம் ஓடியுள்ளதா? எத்தனை படங்கள் வந்துள்ளன? அவற்றில் எவை எவை வெற்றி பெற்றன? என்று பார்க்கலாமா…

அரண்மனை

Aranmanai 2
Aranmanai 2

2014 ம் ஆண்டு முதல் பாகம் வெளியானது. சுந்தர்.சி. இயக்கி நாயகனாகவும் நடித்தார். வினய், ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா என படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக பங்களித்துள்ளனர். படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை பட்டையைக் கிளப்பியது.

படத்தின் கதை திகில் கலந்த நகைச்சுவை என்பதால் ரசிக்க வைத்தது. படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கண்டு வெற்றியைப் பெற்றது. படத்தில் ஆண்ட்ரியா பேயாக உலா வந்து நம்மை பயமுறுத்துகிறார்.

தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கி நடித்த அரண்மனை 2ம் பாகம் 2016ல் வந்தது. சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, திரிஷா, சூரி, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சந்தானத்திற்குப் பதிலாக சூரி காமெடி பண்ணுகிறார். சுவாரசியமான திரைக்கதை படத்தை திகிலும், நகைச்சுவையும் கலந்து ரசிக்க வைக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி.யின் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான அரண்மனை 3 படம் 2021ல் வெளியானது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் காமெடிக்கு யோகிபாபு. முதல் 2 பாகங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனால் வசூலில் வெற்றி வாகை சூடியது.

காஞ்சனா

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2011ல் காஞ்சனா படம் வெளியானது. இதில் சரத்குமார், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். திகில் கலந்த காமெடி படம் என்பதால் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Kanchana 2
Kanchana 2

தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் 2014ல் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் நித்யா மேனன், கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இது முனி படத்தின் 3ம் பாகம். முதல் பாகம் போல இதுவும் காமெடி கலந்து சொல்லப்பட்ட திகில் கதை. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சக்கை போடு போட்டது.

தொடர்ந்து காஞ்சனா 3 படம் 2019ல் ராகவா லாரன்ஸ் இயக்கி அவரது நடிப்பில் வெளியானது. இந்தப் படத்தில் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, ஓவியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

முதல் 2 பாகங்களைப் போல இந்தப் படம் பெரிய அளவில் ரசிக்கப்படவில்லை. ஆனால் எல்லாப் படங்களிலும் ராகவா லாரன்ஸின் நடிப்பும், கோவை சரளாவின் நடிப்பும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளன. காஞ்சனா படத்தின் 4ம் பாகமும் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கம்

Singam
Singam

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடர்ந்து 3 பாகங்களாக சிங்கம் படம் வெளியானது. பட்டையைக் கிளப்பும் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். துரைசிங்கமாக வரும் அவர் நெல்லை பாஷையைப் பேசி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

மிடுக்கான கம்பீரமான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் சூர்யா கலக்குகிறார். படத்தின் விறுவிறுப்பு காட்சிகளை வேகமாகக் கொண்டு செல்கிறது. படம் போனதே தெரியவில்லை. அவ்ளோ ஸ்பீடு. படத்தில் சண்டைக்காட்சிகள் அபாரம். ஆக்ஷன் படமாக வெளியாகி அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சிங்கம் 2 படம் 2013 லும், சிங்கம் 3 படம் 2017 லும் வெளியானது. படத்தின் பிளஸ் பாயிண்டாக விறுவிறுப்பு மட்டுமே இருந்து வந்தது ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு களைப்பை உண்டாக்கி விட்டது. இதனால் முதல் 2 பாகங்களைப் போல 3ம் பாகம் ரசிக்கப்படவில்லை. ஆனால் 4ம் பாகமும் வரும் என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

சிங்கம் படம் 2010ல் வெளியானது. அனுஷ்கா நாயகி. காமெடிக்கு விவேக். வில்லன் பிரகாஷ் ராஜ். சிங்கம் 2ல் ஹன்சிகா, அனுஷ்கா என இரு நாயகிகள். காமெடிக்கு சந்தானம். சிங்கம் 3ல் அனுஷ்கா, சுருதி ஹாசன், ஹன்சிகா என 3 நாயகிககள். காமெடிக்கு சூரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews