ஜெய்பீம் பார்வதி அம்மாளுக்கு சூர்யா செய்த உதவி இதுதான்!

ராசால்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியவர்களின் உண்மையான கதையை தழுவி ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெய்பீம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பதில் அளித்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம்! தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். ஜெய்பீம் திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது கம்யூனிஸ்ட் இயக்கமும் அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதை கண்டு நெகிழ்ந்து இருக்கிறேன்.

இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தி இருக்கிறோம். நீதிபதி சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கின்றோம். மேலும் மறைந்த ராசாக்கண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் தொகையை டெபாசிட் செய்து அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்து இருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய்ச் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் இன பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி அறிவை விருத்தி உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள்’ என்று சூர்யா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print