தீபாவளிக்கு தினுசு தினுசாக உணவு வகையறாக்கள் செய்து அசத்தலாம்…. வாங்க…!

தீபாவளிக்கு இனிப்பு பலகாரங்கள் எவ்வளவு தான் செய்தாலும் மதிய உணவில் மறக்காமல் செய்வது ஜவ்வரிசி பாயாசம் தான். அதற்காக அதை மட்டும் செய்தால் போதுமா…இன்னும் ஒரு சில சூப்பரான ரெசிபிகளையும் சேர்த்துப் பார்ப்போம். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

அக்கார வடிசல்

Akkaravadisal
Akkaravadisal

தேவையான பொருள்கள்:

அரிசி – 250 கிராம்,
வெல்லம் – 250 கிராம்,
பால் – 500 மில்லி,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
வறுத்த முந்திரிப் பருப்பு – 10,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
நெய் – 100 மில்லி.

எப்படி செய்வது?

அரிசியுடன் ஒரு பங்குக்கு 4 பங்கு என்ற அளவில் பால் தண்ணீர் விட்டு வேக வைங்க. வெல்லத்தைக் கரைத்து, சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு வைத்து கெட்டியானதும், சாதத்துடன் கலந்து மசித்து விடுங்க.

அதனுடன் வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலக்குங்க. அவ்ளோ தான் சுவையான அக்கார வடிசல் தயார்.

ஜவ்வரிசி பாயசம்

Javvarisi payasam
Javvarisi payasam

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி – 100 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரிப் பருப்பு – 10,
காய்ச்சிய பால் – 500 மில்லி.

எப்படி செய்வது?

ஜவ்வரிசியை நன்றாக வேக வைங்க. வெந்தவுடன் சர்க்கரையை அதில் சேருங்க. பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை நல்லா கிளறி விடுங்க. அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்குங்க. அவ்ளோ தான். சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெடி.

உக்காரை

Ukkarai
Ukkarai

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு – ஒரு கப்,
துவரம்பருப்பு – ஒரு கப்,
வெல்லம் – 150 கிராம்,
நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

எப்படி செய்வது?

கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைச்சிக்கோங்க. வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க. அப்புறமா அதை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக்கோங்க.

இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால்… உதிரி உதிரியாக வரும். இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்துருங்க. அவ்ளோ தான். உக்காரை ரெடி.

உக்காரைன்ன உடனே பயந்துடாதீங்க. பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல. அதெல்லாம் ஒண்ணுமில்ல. இது பாரம்பரிய இனிப்பு வகைகளுள் ஒன்று தான்..!

பாதாம் தேங்காய் பர்ஃபி

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு – 10,
நெய் – 4 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
சர்க்கரை – 100 கிராம், ரவை – 2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

எப்படி செய்வது?

தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்க. சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய விடுங்க. அப்புறமா அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவுங்க.

இப்போ கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகளாக போட்டு பரிமாறுங்க. செம ருசி…செம ஸ்டைல். இது தாங்க பாதாம் தேங்காய் பர்ஃபி. குட்டீஸ்களுக்குத் தேவையான ஆரோக்கிய ரெசிபி இது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews