மதுரையில பிறந்த மதுரை வீரன் தான் விஜயகாந்த்.. பத்ம பூஷன் விருது பெற்ற கேப்டனுக்கு ரஜினி புகழாரம்

அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சிறப்பித்தது. கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மறைந்தார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தவர் கடந்த சில ஆண்டுகளாகவே பொதுவெளிகளில் தலைகாட்டாமல் இருந்தார்.

எனினும் தனது பிறந்தநாள், கட்சி நிறுவன நாள் போன்ற நாட்களில் மட்டும் அவரது குடும்பத்தார் அவரை வெளியே அழைத்து வந்தனர். கடைசியாக அவர் பங்கேற்றது தேமுதிக பொதுக்குழுவில் தான். அதன் பிறகு சில நாட்களிலேயே தீவிர உடல்நலம் குன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர் இறந்தபோது தமிழகமே கண்ணீர் விட்டு அழுதது. மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் கட்சி, சாதி, மத வேறுபாடுடின்றி தொண்டர்களும், பொதுமக்களும், திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த பலர் நெகிழ்ச்சியுடன் அதைக் கொண்டாடினார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு கெத்தாக இந்த விருதினைப் பெற்றிருப்பார் என்று ஆதங்கப்பட்டனர்.

எனினும் கடந்த மே9 அன்று அவர் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருதினைப் பெற்றுக் கொண்டு சென்னை வந்து அவரது நினைவிடத்தில் சமர்ப்பித்தார்.

ஸ்டார் படத்தால் மீண்டும் ஸ்டாரான காதல் சுகுமார்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அசத்தல்

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த்தின் பத்ம பூஷன் விருது பெற்றதற்கு பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் அவர், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவப்படுத்தி யிருக்கிறார்கள்.

அது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மேலும் பத்ம விருதுகள் 2024 புத்தகத்திலும் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருக்கிறது. அது இன்னும் பெருமை சேர்க்கிறது. அவர் நம்மிடம் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. பல சாதனைகளைச் செய்து மறைந்திருக்கிறார். இனிமேல் விஜயகாந்த் போல ஒருவரைப் பார்க்க முடியாது. அவரை மிகவும் மிஸ் பன்றேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர். அவர் நாமம் வாழ்க..” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews