சுகப்பிரசவம் நடக்க திருச்சி தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள்!! ஆலயம் அறிவோம்

வாழ்க்கை முறை மாற்றத்தாலும், சில மருத்துவமனைகளின் பணத்தாசையினாலும் பெரும்பான்மையான பிரசவங்கள் அறுவை சிகிச்சையில்தான் முடிகின்றது. சுகப்பிரசவம் நிகழ திருச்சி மலைக்கோடை தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்…. சிவன் அருளால் சுகப்பிரசவம் நிகழுமென பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள். சிவன் எப்படி தாயுமானவரா மாறினார் என பார்க்கலாம். வாங்க!

df9ecde595baed34ba5d6ff108233d4c

மலைக்கோட்டை நகரம் திருச்சியில் உள்ளது உச்சிப்பிள்ளையார் கோயில். இங்கே உள்ள மூலவர் ஸ்ரீதாயுமானவசுவாமி. தன் பக்தையான செட்டிப் பெண்ணுக்கு தாய் ரூபத்தில் வந்து, பிரசவம் பார்த்தார் சிவபெருமான் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்!

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த வணிகர் ரத்தின குப்தன். இவரின் மகள் ரத்னாவதி, சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து பூஜித்து வந்தாள். இவரை சீராப்பள்ளி என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருச்சிராப்பள்ளி மலையில் உள்ள ஸ்ரீமட்டுவார்குழலம்மையையும் ஸ்ரீசெவ்வந்தி நாதரையும் தினமும் வழிபட்டு வந்தாள். சிவபார்வதியின் அருளால், கருவுற்றாள் ரத்னாவதி. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மகளைப் பார்க்க பூம்புகாரில் இருந்து புறப்பட்டாள் ரத்னாவதியின் அம்மா. திருச்சியை நெருங்கும்போது காவிரியில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்தக் கரையில் இருந்து அந்தக் கரைக்குச் செல்லமுடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவவலி எடுத்தது. தினமும் செய்யும் சிவ தரிசனம் செய்யமுடியவில்லையே என்று கலங்கிய ரத்னாவதி, இன்னொரு பக்கம் பிரசவ நேரத்தில் அம்மா அருகில் இல்லையே என வருந்தினாள். அப்போது, ரத்னாவதியின் அம்மா வீட்டுக்குள் நுழைந்தார். மகிழ்ந்து நெகிழ்ந்தாள் மகள்.

b2505910ff2135aec6706a07711386b3

வெள்ளம் சூழ்ந்திருக்கும் வேளையில், ஆற்றை எப்படிக் கடந்தாள் அம்மா. எப்படி வந்தாள்?

ரத்னாவதியின் மனம் மகிழ வந்தது அவளின் அம்மா அல்ல. அம்மாவின் வடிவில் சிவபெருமானே வந்தார். பிரசவ வலி அதிகரித்தது. தாயின் ஸ்தானத்தில் இருந்து அம்மையும் அப்பனுமான சிவபெருமானே பக்தைக்கு பிரசவம் பார்த்தார். அழகிய குழந்தையை ஈன்றாள் ரத்னாவதி. அவளுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தார் சிவபெருமான். காவிரியில் வெள்ளம் வடிந்தது. ரத்னாவதியின் அன்னை, கரையைக் கடந்தாள். மகளின் வீட்டுக்கு வந்தாள். குழந்தை பிறந்ததைக் கண்டு மகிழ்ந்தார். தான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே என வருந்தினாள். அப்படியெனில், இத்தனை நாட்கள் ரதனாவதியுடன் இருந்து, பணிவிடை செய்தது யார் என்று தாயும் மகளும் ஆச்சரியப்பட்டு குழம்பினார்கள். அப்போது அவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார். சிவனார், தாயாக வந்து பிரசவம் பார்த்ததால், ஸ்ரீதாயுமானவ சுவாமி எனும் திருநாமம் பெற்றார்.

சித்திரை மாதத்தில், ஐந்தாம் நாளில் பக்தைக்குப் பிரசவம் பார்த்த விழா விமரிசையாக நடைபெறுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், மனம் ஒருமித்து, வீட்டில் விளக்கேற்றி, சிவனாரை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டால், பிள்ளை வரமும் நிச்சயம்; சுகப்பிரசவம் நிகழ்வதும் உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தாயுமானசுவாமி கோவில் காவிரியின், தென்கரையில் திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில் ஒப்பற்ற சுகப்பிரசவ பிராத்தனைத் தலைமாக விளங்குகிறது. இங்கு இறைவன் மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தளி உள்ளார். மலைமேல் மூன்றுதள அமைப்பைக் கொண்ட இத்திருக்கோயில் உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாகக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு சோழர் பல்லவர் பாண்டியர் பிற்காலச்சோழர் நாயக்கர் மராட்டியர் காலக்கட்டிடக் கலைப் பாணிகளைக் கொண்டு விளங்குகிறது.

125ca0d3633a6f98646b0f3a9ae0af6b

மட்டுவார்குழலி அம்பாள் இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

 குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.வாழை மரம், எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு படைக்கிறார்கள். வாழையை மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து, அதை அங்கிருக்கும் ஒரு தூணில் கட்டிவிட, அதை தூளிப்போல சில நிமிசம் அர்ச்சகர் ஆட்டி, பின்பு வாழைப்பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள்.

மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூர்த்தம் இத்தலத்தில் இருப்பது மேலும் சிறப்பு.

உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, “செவ்வந்தி நாதர்’ என்ற பெயரும் உண்டு. எல்லா கோயில்களிலும் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.

சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு “ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்’ நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, “சங்குச்சாமி’ என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, “சங்கநாதர்’ என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.

தாயை இழந்தவர்கள் தாயுமானவர் திருக்கோயிலுக்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப்பிரசவம் ஆவதற்கு தாயுமானவர் தாயுமானவர் திருக்கோயிலில் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews