ஐபிஎல் கப்பே ஜெயிச்சு டயர்டு ஆனாலும்.. தோனி விரும்பி சாப்பிடுற ஒரே டிஷ்.. ரகசியம் உடைக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்..

ஐபிஎல் தொடர் ஃபைனல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டாலும் தற்போது அனைவரது ஏக்கமும் ஒரே விஷயமாகத்தான் உள்ளது. ஐபிஎல் மட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கேட் அரங்கிலும் முக்கிய வீரராக தடம் பதித்திருந்த தோனி, இந்த சீசனுடன் ஒய்வை அறிவிப்பார் என பல்வேறு கருத்துக்கள் பரவலாக இருந்து வந்தது.

அப்படி நடந்தால் அவர் நிச்சயம் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையுடன் தான் ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்றும் சென்னையில் இறுதி போட்டி நடைபெற இருந்ததால் அங்கே அவருக்கு சிறந்த ஃபேர்வெல் கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு ஆசைகளுடனும் ரசிகர்கள் வலம் வந்த வண்ணம் இருந்தனர். இதனிடையே இந்த சீசன் ஆரம்பத்தை மிகச் சிறப்பாக தொடங்கி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், லீக் போட்டியின் கடைசி கட்டத்தில் சில தோல்விகளை தழுவியதால், சிறிய வித்தியாசத்தில் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தனர்.

பெங்களூரிலேயே தோனியின் கடைசி போட்டி அமைந்திருந்ததால் இந்த சீசனுடன் அவர் ஓய்வு பெறக்கூடாது என்றும் தொடர்ந்து ஆட வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் விருப்பங்களை தெரிவித்து வந்தனர் இதனிடையே சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி தனது ஓய்வு முடிவு பற்றி அறிவிக்கவில்லை என்றும் இன்னும் சில மாத கால நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் கூட அதை பற்றி அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த ஒன்று, இரண்டு சீசன்கள் தோனி தொடர்ந்து ஆடி கோப்பையை கைப்பற்றி ஐபிஎல் தொடருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இதற்கு மத்தியில் சிஎஸ்கே அணிக்காக தோனியுடன் இணைந்து ஆடிய தமிழக வீரர் பத்ரிநாத், தோனி பற்றி தெரிவித்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் சிறப்பு விருந்தினர்களாக பத்ரிநாத் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, தோனியின் ஃபேவரைட் உணவு பற்றி பத்ரிநாத் பேசுகையில், “அவருடைய வாழ்க்கையில் தேவையே மிக குறைவு. நானும் அவரை பார்க்கும் போது அவருக்கு நினைத்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், எப்போது போட்டி முடிந்து வந்தாலும் இரண்டு ரொட்டி, கொஞ்சம் பட்டர் சிக்கன் மட்டும் தான் அவர் கேட்பார்.

இதை தவிர பெரும்பாலும் அவர் மற்ற உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடுவதை நான் அந்த அளவுக்கு பார்த்ததில்லை. எனக்கு தெரிந்து எப்போது ஆனாலும் இந்த இரண்டையும் தான் அவர் விரும்பி உண்ணுவார்” என பத்ரிநாத் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...