அரசு கல்லூரி மாணவர்களிடம் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை: மருத்துவக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை!!!
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை வகுப்பறைகள் தொடங்க உள்ள நிலையில் அரசு கல்லூரி மாணவர்களிடம் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
MBBS,BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 4- ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஆன்லைன் வழியில் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த நிலையில் மருத்துவபடிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கல்வி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் ,தேர்வு கட்டணம் ,உணவு உட்பட விடுதி கட்டணம், பதிவுக்கட்டணம், ஸ்டெதஸ்கோப் போன்ற எந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது எனவும் மீறி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்கம் அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதால் எந்தவிதமான கல்வி உதவித்தொகைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
