‘அடக்கொடுமையே’ ஒரு கப் டீ ரூ.100; ஒரு லிட்டர் பால் ரூ.200… வரலாறு காணாத சோகத்தில் மக்கள்!

இலங்கையில் ஒரு கோப்பை தேநீர் 100 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 200 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

இலங்கையில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. 3 டி மூலம் பொருளாதாரம் ஈட்டி வந்த இலங்கை இன்று திண்டாடி வருகிறது. தேயிலை, சுற்றுலா, ஆடை மூலமாக என இந்த 3 துறைகள் தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனாவால், இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது.

விமான சேவை உள்ளிட்டவை முடக்கப்பட்டதால் தேயிலை, சுற்றுலா, ஆடை ஆகியவற்றில் இருந்து கிடைத்து வந்த வருமானம் தடைப்பட்டு, கையில் இருந்த அந்நிய செலவாணியும் கரைந்து போன நிலையில், தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

ஏற்கனவே இலங்கையில் ஒருசவரன் தங்கத்தின் விலை ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்படுவது பேரதிர்ச்சியை உருவாக்கியது. அதேபோல் ஒரு முட்டையின் விலை 35 ரூபாய், ஒரு கிலோ அரிசி விலை 200, பெட்ரோல், டீசல் 250 ரூபாய் என உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒவ்வொன்றாக உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இலங்கையில் ஒரு கப் டீயின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஒரு லிட்டர் பால் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் இலங்கை மக்கள் கண்ணீர் கடலில் தத்தளித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment