இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறது

ஆடி மாத பிறப்பின் சிறப்பு
 
ஆடி மாதம்

ஆடி மாதம் என்பது உத்ராயணம் தட்சிணாயனத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் உத்ராயணம் தட்சிணாயணம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1. உத்தராயனம்

உத்தர் என்றால் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயனம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்கள், உத்தராயன காலமாகும். அதாவது இந்த ஆறு மாத காலங்களில் சூரியன் தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி ஒவ்வொரு நாளும் நகர்ந்து உதயமாவார். நம்முடைய இந்த ஆறு மாத காலமானது தேவர்களுக்கு ஒரு பகல் பொழுதாகும்.

2. தட்சிணாயனம்

தட்சண் என்றால் தெற்கு என்று பொருள். சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். அதாவது இந்த ஆறு மாத காலங்களில் சூரியன் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி ஒவ்வொரு நாளும் நகர்ந்து உதயமாவார்.

ஆடி மாதம் 1ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோயில்களில் பஜனை பாடி தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டு கூழ் ஊற்றுவது அம்மனுக்கு உகந்த அபிசேக அலங்காரங்கள் செய்யப்படுவது, மாரியம்மனுக்கு முளைப்பாரி வைப்பது, மதுக்குடம் எடுப்பது, தீ மிதி திருவிழா நடத்துவது, பூச்சொரிதல் விழா நடத்துவது என ஒவ்வொரு ஊரிலும் அம்மனுக்கு விசேஷமான விழாக்கள் நடத்துவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பெரும்பாலான திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.

ஆடி மாதம் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். மாவிளக்கு வைத்தல், தீபம் ஏற்றுதல் என பெண்கள் தங்கள் கோரிக்கைக்காக வேண்டிக்கொள்வார்கள். ஆடி மாதம் வந்தாலே அந்த மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்காது ஸ்வாமிக்கு உள்ள திருவிழாக்கள் மட்டுமே நடக்கும். ஆடி மாதம் வரும் கிருத்திகை திருத்தணியில் விசேஷமாக கொண்டாடப்படும், ஆடிப்பூரம், ஆடித்தபசு போன்ற விழாக்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில் போன்ற இடங்களிலும் விசேஷமாக கொண்டாடப்படும்.

உத்தராயனமும் தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை மாதமானது மகர ராசிக்குரிய மாதமாகும். சூரிய பகவான் உத்தராயன காலம் ஆரம்பிக்கும் நாளான தை 1ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைகிறார். எனவே உத்தராயன கால ஆரம்பம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

எனவே இந்த காலங்களில் வரும் அமாவாசைகளில் நம் முன்னோர்கள் இறைவனை வழிபட அனுமதிக்கபடுவர் அப்போது நம் வேண்டுதல்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் வழிபாட்டு வழியாக நேரடியாக இறைவனை அடையும்.

From around the web