வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் அந்தளவு புனிதமான தலம். அதனால்தான் அதை தென்காசி என்றும் சொல்வார்கள். அத்தல சிறப்பு மற்றும் இங்குள்ள அக்னி தீர்த்தம் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் எனும் கடற்கரை நகரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இத்தலம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு:
இக்கோவில் மூன்று பிரகாரங்கள் கொண்டது. முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் கோவிலின் மூலவர் ராமநாதசுவாமி கர்ப்பகிரகத்தில் அமைந்துள்ளார்.மூன்றாம் பிரகாரம்
1212 தூண்களுடன் கூடிய பிரமாண்டமான பிரகாரம். பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி, நடராஜர் சன்னதி, நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவர் சன்னதி, சரசுவதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் போன்ற பல சன்னதிகள் உள்ளன.
சிறப்புகள்:
ராமாயண காவியத்தின் படி, இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமன் இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் மற்றும் அப்பர் ஆகியோர் இத்தலத்தைப் பற்றி பாடல்கள் இயற்றியுள்ளனர்.
மதுரையிலிருந்து கிழக்கே 161 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள இக்கோவில், “தென்காசி” என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம் பெருகும்
ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்கள் உள்ளது. இங்கு நீராடிவிட்டு இறைவனை வழிபடுவது சிறப்பு. அதே போல கடற்கரையில் உள்ளது அக்னி தீர்த்தம். இங்கு நீராடினால் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். அமாவாசைகளில் இங்கு ஏராளமான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கான வழிபாடு செய்வர்.