தோஷங்களை நிவர்த்தி செய்யும் தென்னகத்தின் கோனார்க் கோவில்…நவக்கிரகங்களின் தோஷம் போக்கிய சிவபெருமான்…!

நவக்கிரகங்களுக்கு என்று சிறப்பாக ஒரு தலம் உள்ளது. அதை நவக்கிரகக் கோவில் என்றும் அழைக்கிறோம். தென்னகத்தின் கோனார்க் கோவில் என்ற சிறப்புடைய தலமும் இதுதான். தோஷங்கள் தான் ஒருவருடைய வாழ்வின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முக்கியக் காரணியாக உள்ளது.

அதை நிவர்த்தி செய்ய ஆன்மிகத்தில் மட்டுமே வழிவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இது. இங்கு சென்று சூரிய பகவானைத் தரிசித்து வந்தால் அத்தனை விதமான தோஷங்களும் நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

அமைப்பு

Thirumangalakudi 2
Thirumangalakudi 2

சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள சிவனின் பெயர் சிவ சூரியன். அம்பாளின் பெயர் உஷாதேவி, சாயாதேவி. இத்தலத்தின் தலவிருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.

சூரிய தீர்த்தம் உள்ளது. காசி விஸ்வநாதர் இத்தலத்தின் இறைவன். இறைவி விசாலாட்சி. நவகிரகத் தலங்களில் இத்தலம் சூரிய பகவானுக்குரிய தலம்.

தலச்சிறப்பு

நவக்கிரக தங்களில் சூரிய தலம் முதன்மையானது. இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே சூரிய பகவானுக்கு கோவில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில், தெற்கே இந்த சூரியனார் கோவில் உள்ளது. கோனார்க்கில் உருவ வழிபாடு கிடையாது. ஆனால் இந்த சூரியனார் கோவிலில் உருவ வழிபாடு உள்ளது.

இத்தலத்தில் சூரிய பகவான் இடது புறத்தில் உஷா தேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷா தேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்த மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

Mangalampikai
Mangalampikai koil

இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்குகின்றன. ஏழரை ஆண்டுச்சனி, அஷ்டமத்துச்சனி, ஜென்மச்சனியால் தொடரப்பட்டவர்களும், வேறு பிற நவகிரதோஷம் உள்ளவர்களும் ஏராளமானோர் வந்து இத்தல இறைவனை வழிபட்டு தோஷங்கள் நீங்கிச் செல்கின்றனர். ஆகையால் இத்தலம் தோஷங்களின் நிவர்த்திதலமாகவும் விளங்குகிறது.

பிரார்த்தனை

சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரியதோஷங்களும் உள்ளவர்கள் சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து வந்து அதிகாலையில் நவதீர்த்தங்களில் நீராடி உபவாசமிருந்து பிரார்த்தனை செய்யலாம்.

திருமங்கலகுடியில் எழுந்தருளியுள்ள சுவாமி பிராண நாதரையும், அம்பாள் மங்கள நாயகியையும் வணங்கி பிறகு இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களைச் செய்து வர மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆவது கண்கூடு.

தல வரலாறு

திருமங்கலகுடி பிராண நாதரையும் மங்களாம்பிகையும் முதலில் வணங்க காரணம் இதுதான்.

ஒரு சமயம் கமலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்தநோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார்.

எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்புலிங்கமாக எழந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களுக்கு பீடித்த தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார். எனவேதான் இத்தலத்து இறைவனை வணங்கிய பிறகு சூரிய பகவானை வணங்க வேண்டும்.

தரிசன நேரம்

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews