உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருவதால், ரஷ்யாவுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதிலும் குறிப்பாக ரஷ்ய நாட்டில் பல நிறுவனங்கள் பல்வேறு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதுவும் குறிப்பாக டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது திரைப்படங்களை ரஷ்யாவில் திரையிட மறுப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் மற்றொரு நிறுவனமான சோனி மியூசிக் ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்தி உள்ளதாக தகவல் அளித்துள்ளது.
அதன்படி ரஷ்யாவில் தங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனில் நிலவிவரும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக சோனி மியூசிக் நிறுவனம் கூறியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்கி ஆதரவை தொடர்வோம் என்று சோனி மியூசிக் கூறுகிறது. இவ்வாறு உலக நாடுகள் மட்டுமின்றி முன்னணி நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு அறிவிப்புகளை பிறப்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.