உயிரிழந்த அம்மா அழைத்தார்.. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இளைஞர் தற்கொலை

உயிரிழந்த அம்மா அழைத்தார் என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரின் தாயார் கடந்த 18 வருடங்களுக்கு முன் உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். தாயார் காலமான நாளில் இருந்தே ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது தாயார் தன்னை பார்க்க விரும்புவதாக கூறுவதாக தனது சகோதரியிடம் கூறியுள்ளார். தானும் தனது தாயை பார்க்க விரும்புவதாகவும், தனது தாய் அடிக்கடி கனவில் வருவதாக ராஜூ கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜூ தனது இன்ஸ்டாகிராமில் தன்னை தனது அம்மா பார்க்க விரும்புவதாகவும் அதனால் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன் என்று பதிவு செய்துவிட்டு தனது சகோதரியின் துப்பட்டாவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மறுநாள் காலை ராஜூ சகோதரி தனது சகோதரர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையினர் உடனடியாக வந்து ராஜூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 18 ஆண்டுகளாக தனது தாயார் இறந்ததிலிருந்து ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவ்வப்போது தாயுடன் செல்ல இருப்பதாக அவர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.