Connect with us

‘ஒரு கோடி அப்பு’… சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் மாமனாரை கடத்திய மருமகன் பணகேட்டு மிரட்டல்

gun gunshot handgun murder

தமிழகம்

‘ஒரு கோடி அப்பு’… சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் மாமனாரை கடத்திய மருமகன் பணகேட்டு மிரட்டல்

வேலூர் அருகே சினிமா பாணியில் நிதி நிறுவன ஏஜெண்டை காரில் கடத்திய மர்ம கும்பல். ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தாமோதரனை கடந்த 12 ஆம் தேதி மர்ம நபர்கள் ஆந்திராவுக்கு காரில் கடத்திச் சென்றனர்.

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கடத்தல் காரர்களை துப்பாக்கி முனையில்  மடக்கி பிடித்த போலீஸ். கண்கள் மற்றும் கைகளை கட்டி புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிதி நிறுவன ஏஜென்ட் தாமோதரனை போலீசார் மீட்டனர். கடத்தல் காரர்கள் இருவரை கைது செய்து பரதராமி போலீசார் விசாரணை.

தலைமறைவான எல்லை பாதுகாப்பு படை வீரரை பிடிக்க தனி படை போலீசார் தீவிரம். மருமகனே சின்ன மாமனாரை பணத்திற்காககடத்தியது விசாரணையில் அம்பலம். ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி

வேலூர் அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு சினிமா பாணியில்  ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டை காரில் கடத்திய மர்ம நபர்களை தமிழ்நாடு -ஆந்திரா எல்லையில் துப்பாக்கி முனையில்  மடக்கி பிடித்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். தப்பியோடிய மருமகனுக்கு போலீசார் வலைவீச்சு. பணத்துக்காக மருமகனே சின்ன மாமனாரை காரில் கடத்திச் சென்றது விசாரணையில் அம்பலம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள தாசிராப்பல்லி  கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி இவரது மகன் R.C.தாமோதரன் (47). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

மேலும் இதே நிறுவனத்தின் முகவராகவும் செயல்பட்டு வந்த தாமோதரன் குடியாத்தம், பரதராமி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்களிடம் இருந்து கூடுதல் வட்டி பெற்று தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் பல லட்சம் ரூபாய் நிதி வசூல் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் முறைகேடக செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கிய நிலையில் அதில் முதலீடு செய்தவர்களின் பணம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் தாமோதரனிடம் பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த திங்கட்கிழமை 12ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தாமோதரன் மாயமானார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது மனைவி மகாலட்சுமி கடந்த 13 ஆம் தேதி பரதராமி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என  புகார் மனு அளித்தார்.

கடந்த 14ஆம் தேதி தாமோதரன் தனது செல்போனில் இருந்து மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்துள்ளார் அப்பொழுது தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்யவும் மனைவியிடம் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். தனது கணவர் கடத்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலை போலீசாரிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பணத்துக்காக ஆள் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் உதவியோடு கடத்தல் காரர்களை பிடிக்க முடிவு செய்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை பிடிக்க சினிமா பாணியில் நூதன முறையை கையாண்டனர்.

அதன்படி மகாலட்சுமியிடம் பணம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் அதனைப் பெற்றுக் கொண்டு தனது கணவரை விடுவிக்குமாறு கடத்தல்காரர்கள் அடுத்த முறை போன் செய்யும்போது கூறும்படி மகாலட்சுமி இடம் தனிப்படை போலீசார் தெரிவித்திருந்தனர். கடந்த 15 ஆம் தேதி காலை தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் தனியாக வர வேண்டுமென கடத்தல் காரர்கள் தாமோதரனின் போனிலிருந்து தகவல் தெரிவித்தனர்.

சொன்னபடி மகாலட்சுமி அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது கடத்தல்காரர்கள் வரவில்லை… மீண்டும் போன் செய்து கேட்டபோது மாலை குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வரும்படி மீண்டும் இடத்தை மாற்றினார்கள். ஆனால் அப்பொழுதும் கடத்தல் காரர்கள் அங்கும் வரவில்லை.

போலீசார் தங்களை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தொடர்ந்து கடத்தல் காரர்கள் இடத்தை மாற்றி மாற்றி கூறி வந்தனர். இந்த நிலை இன்று காலை  பலமநேர்- குடியாத்தம் சாலையில் தமிழ்நாடு ஆந்திர எல்லை அருகே வரும்படி தாமோதரன் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. இவனை எடுத்து தாமோதரன் மனைவி மகாலட்சுமி இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசார் ரகசியமாக அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இருப்பினும் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் தமிழ்நாடு ஆந்திர எல்லை அருகே சந்தேகப்படும் படியாக நடமாடிக் கொண்டிருந்த இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருந்தபோதே தப்பிக்க முயற்சித்தனர் அவர்களை துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் தாமோதரனை கடத்தியது அவர்கள் தான் என தெரியவந்தது.

இதனை அடுத்து தமிழ்நாடு ஆந்திர எல்லை பகுதியில் கண்கள் மற்றும் கைகளை கட்டிய நிலையில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாமோதரனை மீட்டனர். மேலும் ஒருவர் தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய எல்லை பாதுகாப்பு படை வீர ரமேஷ் என்பவரை  தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பணம் கேட்டு கடத்திய சுரேஷ் (32), ராஜ்குமார்(30) ஆகியோரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டு மருமகனே தாமோதரனை வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடந்த 12-ம் தேதி திங்கட்கிழமை மாலை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

சித்தூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர் கடத்தப்பட்ட தாமோதரனின் மருமகன் ஆவார். ரமேஷ் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் தாமோதரன் மூலம் 23 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார் மேலும் ரமேஷ் நண்பர்கள் உள்ளிட்ட சிலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி விட்டனர்.

இந்த நிலையில் தாங்கள் நிறுவனத்தை முதலில் செய்த பணத்தின் நிலை கேள்விக்குறியானது. இதனால் ரமேஷ் தொடர்ந்து தனது பணத்தை ஆருத்ரா நிறுவனத்தில் இருந்து பெற்று தரும்படி நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது சின்ன மாமா தாமோதரனை ஆந்திர மாநிலம் சித்துருக்கு தனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் ராஜ்குமார் உதவியுடன் வேலூரில் இருந்து கடந்த 12ஆம் தேதி காரில் கடத்தி சென்றனர்.

14 ஆம் தேதி தாமோதரனின் செல்போன் மூலம் மனைவிக்கு தொலைபேசியை தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தாமோதரன் செல்போன் சிக்னல்களை ட்ராக் செய்தனர் அப்பொழுது தாமோதரன் என் செல்போன் சிக்னல்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நெல்லு பட்லா என்னும் இடத்தில் இருப்பதாக காட்டியது.

மேலும் அந்த செல்போன் சிந்தனைகள் அடிக்கடி தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடத்தல்காரர்களை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி தாமோதரனின் மனைவி மகாலட்சுமிடம் பணம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு போனில் தெரிவித்துள்ளார்.

கடந்த15ஆம் தேதி இரண்டு இடங்களுக்கு வர சொன்ன மர்ம நபர்கள் இன்று காலை தமிழ்நாடு ஆந்திர எல்லையருகே வரச் சொல்லி மீண்டும் போன் செய்ததை அடுத்து மகாலட்சுமியை பின் தொடர்ந்த போலீசார் தமிழ்நாடு ஆந்திர எல்லை அருகே கடத்தல்காரர்களை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து தாமோதரனை மீட்டனர். பணத்திற்காக மருமகனே மாமனாரை காரில் கடத்திய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top