மண்டேலா பட பாணியில் கிராம தலைவர் பதவியை ஏலம் விட்ட கிராம மக்கள்….. ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

பொதுவாக ஏதேனும் ஒரு பதவிக்கு யாரேனும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? தேர்தல் அல்லது வாக்களிப்பு முறையை பயன்படுத்தி யார் அதிக ஓட்டுகளை பெறுகிறார்களோ அவர்களை அந்த பதவிக்கு தேர்வு செய்வது தானே வழக்கம். ஆனால் இங்கு வித்தியாசமான முறையில் தேர்தல் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வரும் நடிகர் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான மண்டேலா படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் யோகி பாபுவின் ஓட்டு யாருக்கு என்பதை ஏலம் மூலம் தீர்மானிப்பதற்காக ஊர் மத்தியில் ஏலம் நடைபெறும். படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி அப்படியே நிஜத்தில் நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

உண்மை தான் ஆனால் நிஜத்தில் ஓட்டுக்கு பதில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் நடந்துள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள பதவுளி கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை ஏலம் மூலம் முடிவு செய்துள்ளனர்.

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 பேர் தேர்தலில் போட்டியிட இருந்தனர். இந்த ஐவரில் யார் கிராம தலைவர் என்பதை ஏலம் மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்த ஊர் மக்கள் அங்குள்ள கோவிலில் ஏலத்தை நடத்தி உள்ளனர். ஆரம்ப விலையாக 21 லட்ச ரூபாயில் தொடங்கிய ஏலம் இறுதியில் 44 லட்ச ரூபாய்க்கு முடிந்தது.

சுபாக் நிங் யாதவ் என்பவர் 44 லட்ச ரூபாய்க்கு ஏலத்தை கைப்பற்றியதால் அவரையே கிராம தலைவராக்க கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். மேலும் ஏலத்தில் இவர் வெற்றி பெற்று விட்டதால், இவரை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யமாட்டார்களாம். அவரும் தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்றுவிடுவாராம். இவ்வாறு ஏலம் மூலம் தலைவரை தேர்வு செய்வதால் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்ப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment