கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பள்ளி சிறுமிகள் அழகு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்துரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுள்ளார். இதனையடுத்து அந்த 3 மாணவிகளையும் இன்று மாணவிகளையும் இன்று தலைமைச் செயலகத்தில் அழைத்துப் கலந்துரையாடினார்.
அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும், பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் முதலமைச்சருக்கு அம்மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார்.