கர்நாடகாவில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து – கார் மோதல்:
குடகு-தட்சின கன்னடா எல்லையில் உள்ள சம்பாஜே கேட் என்ற இடத்தில் அரசுப் பேருந்து மீது அவர்கள் சென்ற கார் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மளவள்ளியைச் சேர்ந்த குமார் என்பவர், மாண்டியாவைச் சேர்ந்த தனது நண்பரான மஞ்சுநாத் குடும்பத்துடன் சேர்ந்து குக்கி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மஞ்சுநாத்துடன் அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் மனுஸ்ரீ ஆகியோரும் சென்றுள்ளனர்.
மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள குக்கி சுப்ரமணியசுவாமி கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் காரில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சம்பாஜே கேட் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, சுல்லியாவிலிருந்து வந்த கர்நாடகாவின் அரசு பேருந்து மீது மோதியது.
6 பேர் உயிரிழப்பு:
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் மாண்டியா மற்றும் மாளவல்லியைச் சேர்ந்தவர்கள் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் குமார் (35) ஷில்பா (29), யஷாஸ் கவுடா (8), பிரியங்கா (35), மூன்று வயது மனுஸ்ரீ மற்றும் எட்டு மாத குழந்தை நிஷிகா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் எட்டு வயதான பியான் கவுடா மற்றும் 40 வயதான மஞ்சுநாத் ஆகியோர் காயமடைந்துள்ளனர். சுல்லியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.