15 ஆண்டுகளுக்கு பின்னர் நடிக்க வரும் சிவகுமார்… யார் படத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் தந்தையுமான நடிகர் சிவகுமார் படங்களில் நடித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முன்னதாக இவர் படங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்துள்ளார்.
தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து இவரை மீண்டும் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறாராம். அவர் வேறு யாருமல்ல தமிழில் குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் தான். இதுதவிர இவர் தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூ முருகன் இறுதியாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய ஜிப்ஸி படம் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் இவர் தற்போது தனது வழக்கமான பாணியை தவிர்த்து முழுக்கு முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ராஜூ முருகன் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் யானை டாக்டர் என்ற கதையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளிலும் இறங்கி இருந்தாராம். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகுமாரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால் நடிகர் சிவகுமார் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்போது அவர் மீண்டும் நடிக்க வருவாரா என்பது சந்தேகமே என்பதால் ராஜூ முருகன் அந்த திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டாராம். முதலில் கார்த்தி படத்தை முடித்துவிட்டு பின்னர் அதை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
