சினிமாவில் வெற்றி தோல்வி லாபம் நஷ்டம் என எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதை நாம் கணிக்க முடியாது. அப்படி ஒரு படம் தோல்வி அடையும்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது அந்த படத்தின் தயாரிப்பாளர் தான். ஏனெனில் அவர் தான் முதல் போட்டு படத்தை தயாரிக்கிறார்.
அந்த படம் வசூல் செய்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்க முடியும். இல்லையெனில் அவ்வளவு தான். அந்த வகையில் சினிமாவில் பலர் நஷ்டமடைந்து உள்ளனர். அந்த வரிசையில் தயாரிப்பாளர் மதனும் ஒருவர். ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் தயாரிப்பாளராக வலம் வந்தவர் தான் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மதன்.
ஆரம்பகாலத்தில் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த மதன் இயக்குனர் கௌதம் மேனனோடு இணைந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்கிய மதன் தற்போது படமே தயாரிக்க முடியாத நிலையில் உள்ளார்.
இந்த தயாரிப்பாளர் மதன் தான் நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறையில் நுழைந்த சமயத்தில் அவரை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மான் கராத்தே ஆகிய படங்களை தயாரித்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாக சிவகார்த்திகேயனை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர் கஷ்டத்தில் இருப்பதை அறிந்த சிவகார்த்திகேயன் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி அவரை அழைத்து பேசிய சிவகார்த்திகேயன், “கண்டிப்பாக நாம் ஒரு படம் பண்ணலாம். ஆனால் அதற்கு முன்னர் எல்லா பைனான்ஷியல் சிக்கல்களையும் தீர்த்துவிட்டு வாருங்கள்” என கூறியுள்ளாராம்.
சிவகார்த்திகேயனையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் ஏற்கனவே அவருக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை உள்ளது. இதில் மதனின் பிரச்சனையிலும் சிக்கிக் கொண்டால் அவர் நிலைமை அவ்வளவு தான். அதனால் தான் முன்னெச்சரிக்கையாக சிக்கல்களை தீர்த்து விட்டு வாருங்கள் என கூறியுள்ளார்.