சிங்கார சென்னை 2.0: ரூ.45.19 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 45.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவமழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன.

பருவமழையின் காரணமாக மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தாரிக்கலவை (Cold Mix) கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனையின் படி 45.19 கோடியில் 233 உட்புற தார் சாலைகள்,34 பேருந்து தார் சாலைகள்,63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்,2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள்,47 இன்டர் லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 03.01.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். சாலைகள் அமைக்கப்படும் பொழுது ஏற்கனவே உள்ள சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டு,
புதிய சாலை அமைக்கப்படும். மழைநீர் வழிந்தோடும் வகையில் வடிகால் உள்ள திசையில் சாலை சரிவுடன் அமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் சாலைகள் அமைக்கப்படும் பொழுது அப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய பலகைகளை உள்ளபடியே பராமரித்தல். சாலைகளில் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வேலி அமைத்தல், புதிய சாலைகள் அமைக்கப்படும் இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேவைப்படின் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைத்தல், சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாத உட்புறச் சாலைகளில் மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் சாலையின் இருபுறமும் சிறிய வடிகால் (Saucer Drain) அமைத்தல் போன்ற பணிகளும், சாலைப் பணிகளுடன் இணைத்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.