சிட்டிசன் பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்; திடீரென 537 ஆதிதிராவிடர்கள் மாயம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் சேமனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 218 ஆதிதிராவிடர் குடும்பங்கள் உட்பட 456 குடும்பங்களைச் சேர்ந்த 2972 மக்கள் வசித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி சேமனூர் கிராமத்தில் ஆதிதிராவிட வாக்காளர்கள் 537 நபர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேமனூர் கிராமத்தில் ஒரே ஒரு ஆதிதிராவிடர் பெண் மட்டும் இருப்பதாக கூறுவதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடி காரணமாக சேமனூர் கிராமத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் ஒதுக்கப்படவில்லை.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்திற்கு தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள குளறுபடியை சரி செய்து தர வேண்டும் என ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மக்கள் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி பதக்காதவதியிடம் மனு அளித்தனர்.

ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவை தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவி மற்றும் வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
சேமனூர் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் மற்றும் வசித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள குளறுபடியை சரி செய்ய சிட்டிசன் பட பாணியில் கிராம மக்கள் அளித்த மனு பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.