#Shocking அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளி நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் கட்டுப்பாடுகளை மீறி கட்சிப் பெயருக்கு களங்கம் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நியமித்து இருந்த நிலையில் ஈபிஎஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. கட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். மேலும் ஈபிஎஸ் அணியில் உள்ள முக்கிய புள்ளிகளையும் தட்டித்தூக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியதாக கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே இன்று காலை அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்” இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. என கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment