கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிரட்டல்.. பாதிக்கப்பட்ட மாணவி எஸ்பி அலுவலகத்தில் புகார்..
ஈரோட்டில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்..
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி, ஈரோட்டில் தங்கி கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை மர்ம நபர்கள் இவரின் டெலிகிராம் எண்ணிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி, போலீசாரின் அறிவுரைப்படி டெலிகிராம் செயலியை டெலிட் செய்துள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் அதைப்போன்ற மேலும் சில மார்பிங் படங்களை இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கும் பெற்றோர் மற்றும் நண்பர்களின் எண்ணிற்கும் மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர்.. மேலும் குறிப்பிட்ட அந்த எண்களில் இருந்து வீடியோ கால் செய்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்..
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி, இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார் அதில், பாலியல் ரீதியாக தனக்கு மிரட்டல் விடுப்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை பெற்றுத்தரவும் வலியுறுத்தி உள்ளார்..