#Breaking சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள், 6 ஆண்டுகள் சிறை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 46 வயது நபருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (46). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த பொழுது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியின் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை பயன்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் பெற்றோர் அவரிடம் விசாரணை செய்த போது சிறுமி நடந்துவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது பரிசோதனை மூலமாக தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து விராலிமலை காவல் துறையினர் குழந்தைவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா, குழந்தைவேலு மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment