
தமிழகம்
செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளதால் இன்று உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 12 மணிக்கு ஏரி நீர் திறக்கப்பட உள்ளது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு,திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதி மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்கள் வெளியேற வேண்டும் என்ற தகவலையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
