விமானத்தில் பயணம் செய்த பெண்ணை தேள் கடித்ததால் பரபரப்பு..! மும்பையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விமானத்தில் பாம்பு எலி போன்ற உயிரினங்கள் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் உலகின் பல இடங்களில் நடந்துள்ளன. விமானத்தில் கொடிய விஷ பாம்பு இருக்கும் சம்பவம் குறித்த திரைப்படங்கள் கூட வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மும்பை வந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த பெண்ணை தேள் கடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் காலில் திடீரென ஏதோ கடித்தது போல் இருந்தது. உடனடியாக அவர் அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது தேள் ஒன்று நகர்ந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் அலறினார். உடனடியாக விமான பணிப்பெண்கள் வந்து பார்த்தபோது அந்த பெண்ணை தேள் கடித்தது உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து விமான கேப்டனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விமான கேப்டன் உடனடியாக மும்பை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் மருத்துவ உதவிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்திருந்தார். இந்த நிலையில் மும்பை விமான நிலையம் வந்தவுடன் தேள் கடிக்கப்பட்ட பெண் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விமானத்தில் தேள் இருக்கும் அளவிற்கு விமான நிறுவனத்தின் நிர்வாகிகள் அஜாக்கிரதையாக இருந்தது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்புக்கு விமான நிறுவனம் தான் பொறுப்பு என்றும் விமானத்தில் இது போன்ற உயிரினங்கள் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் விமானம் சரியாக பராமரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விமான நிறுவனம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அரபு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த விமானத்தில் ஒரு  பறவை கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் துபாய்க்கு சென்ற இந்திய விமானத்தின் சரக்கு பெட்டியில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பல விமானங்களில் எலிகள் பயணிகளை தொல்லை தந்த சம்பவங்கள் நடந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.