27 நாடுகள், 27,200 கி.மீ, 593 நிகழ்ச்சிகள்… ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் சத்குரு!

மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கேற்பு

அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடக்கும் ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் பங்கேற்கிறார். அந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதை தொடர்ந்து மாலையில் கொடிசியாவில் நடக்கும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.

பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியில் உள்ளூர் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பாரம்பரிய இசை கருவிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை தொடங்கிய சத்குரு, கடும் குளிரையும், கன மழையையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடர்ந்தார். சுட்டெரிக்கும் பாலைவன வெயிலிலும், புழுதி புயலுக்கு இடையில் சத்குரு தனது சவாலான பயணத்தை இடைவிடாமல் மேற்கொண்டார். அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அரங்கே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் நிகழ்ச்சியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திருமதி. மரியம் பின்ட் முகமது பங்கேற்று தங்களுடைய அரசின் முழு ஆதரவை தெரிவித்தார். இதேபோல், இஸ்லாமிய முஸ்லீம் லீக் அமைப்பும், பாலஸ்தீன பிரதமர் திரு.முகமது ஷ்டேயேவும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29-ம் தேதி பாரத நாட்டிற்கு வந்த சத்குருவிற்கு குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதம் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார்.

குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிறத் துறை அமைச்சர்களையும் சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தினார்.

சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவில் 7 மாநிலங்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.