News
தமிழக அரசுக்கு சத்யராஜ் மகள் வைத்த முக்கிய கோரிக்கை

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் சமீபத்தில் மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் “மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது என்றும், வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் என்றும், வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்கவும், கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழர்களுக்கு 70% முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக பல கம்பெனிகள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பல தொழிலாளர்கள் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் நியாயம் கிடையாது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை விஷயமாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை விரைவில் சந்திப்போம்’ இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
