வேண்டுதல் பலிக்க….மன்னர் கட்டினார் கோவில்…! பட்டினி கிடக்கும் மாரியம்மன்…எதற்காக தெரியுமா? சுவாரசிய தகவல்

சக்தி திருத்தலங்களுள் பல கோவில்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குகிறது.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாகவும் அமைந்துள்ளது.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன.

Samayapuram koil
Samayapuram koil

அந்த இடம் பின்னர் வேப்பமரக் காடாயிற்று. சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

இனாம் சமயபுரம்

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர். அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட்டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்.

அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

27 நட்சத்திரங்களின் ஆதிக்கம்

samayapuram Mariaman
samayapuram Mariaman

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று காஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப்புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத்தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள்.

அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்.

தல வரலாறு

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை. சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர்.

எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கின்றனர்.

வசுதேவர், தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன், யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர்.

அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளிடம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2ஆம் திருநாளிலிருந்து 8ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9ஆம் நாள் தெப்பத் திருவிழா.

பூச்சொரிதல் திருவிழா

சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும். பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்…! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை கலந்த கலவை ), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, 3 யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

S Puram Mari
S Puram Mari

தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

தேர்த்திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9 ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன்.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.