தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் புத்தாண்டில் உறுதி எடுங்கள் – சத்குரு!

“நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சத்குரு கூறியுள்ளதாவது:

தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த காலத்தில் நாம் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். ஆனால், மண் வளத்தை காக்கும் விஷயத்தில் நாம் போதிய நடவடிக்கைகளை எடுக்காதது வருந்தத்தக்க விஷயமாகும்.

நம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த 40 வருடங்களில் நம் மண்ணின் வளம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் ஏராளமான பாதிப்புகளை சந்திக்கின்றனர். நம் உண்ணும் உணவில் தேவையான சத்துக்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால், மக்களுக்கு பல விதமான நோய்கள் வருகிறது.

இந்தப் பிரச்சினை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. ஆகவே, மண் வளத்தை பாதுகாப்பதற்காக மண் காப்போம் என்ற இயக்கத்தை நாம் தொடங்கி உள்ளோம். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக லண்டன் முதல் தமிழ்நாடு வரை மோட்டார் சைக்கிளில் நான் பயணித்து வருகிறேன். ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு துறை தலைவர்கள், விஞ்ஞானிகள் உட்பட பலரை சந்தித்து பேசி வருகிறேன். மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம்.

மண்ணில் வாழ கூடிய நுண்ணுயிர்கள் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த நுண்ணுயிர்கள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழ முடியாது. மண்ணில் மட்டுமின்றி நம் உடலிலும் 60 சதவீதம் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இப்போது நாம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 30, 40 ஆண்டுகளில் பெரும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே, மண் வளத்தை பாதுகாக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும்.

இதில் தமிழ் மக்கள் அனைவரும் முழுமையாக ஈடுப்பட வேண்டும். மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்களை இயற்ற கோரி தமிழக முதல்வருக்கு குழந்தைகள் கடிதங்கள் எழுத வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய எம்.எல்.ஏக்களுக்கு கடிதங்கள் எழுத வேண்டும். இதுதவிர, அனைவரும் சமூக வலைத்தளங்களில் மண் வளப் பாதுகாப்பு குறித்து அதிகம் பேச வேண்டும்.

நமக்கு தாயாக விளங்கும் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் புத்தாண்டில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இது நம்முடைய அடிப்படை கடமை மற்றும் பொறுப்பாகும். அன்பான தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.