‘சபாஷ் மீனா’ ‘சபாஷ் மாப்பிள்ளை’ படங்களின் நாயகி இவர் தான்.. அழகு நிலா மாலினி..!

சிவாஜி கணேசன் நடித்த ‘சபாஷ் மீனா’ மற்றும் எம்ஜிஆர் நடித்த ‘சபாஷ் மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் தான் நடிகை மாலினி.

இவர் ‘அழகு நிலா’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அவரை ரசிகர்கள் அழகு நிலா மாலினி என்றே அந்த காலத்தில் அழைத்து வந்தனர். நடிகை மாலினி தமிழ் தெலுங்கு என 14 படங்கள் மட்டுமே நடித்தார். ஆனால் கடந்த 1960களில் அவர் மிகவும் பிரபலமாக இருந்தார். அவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

நடிகை மாலினி ‘சந்தானம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் முதல் முதலில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் நாயகன் அக்னி நாகேஸ்வரராவ். இவர்தான் தற்போதைய பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாவித்திரி நாயகியாக நடித்திருந்தாலும் மாலினி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலே மாலினி நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இதனையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த மாலினி அதன் பிறகு ‘சபாஷ் மீனா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். சிவாஜி கணேசன், சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த இந்த படத்தில் மாலினி, டைட்டில் கேரக்டர் ஆன மீனா என்ற கேரக்டரில் நடித்தார். அவரது நடிப்பு அபாரமாக பேசப்பட்டது.

malaini2

இதன் பிறகு தமிழில் அவர் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘தலை கொடுத்தான் தம்பி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ‘அவள் யார்’, ‘உத்தமி பெற்ற ரத்தினம்’, ‘அழகர் மலைக்கள்ளன்’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த மாலினி மீண்டும் தமிழுக்கு வந்து ‘சபாஷ் மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் நடித்தார். எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா நடித்த இந்த படத்தில் மாலினி தான் நாயகி. எம்ஜிஆர் ஜோடியாக அவர் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

malini3

‘சபாஷ் மாப்பிள்ளை’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனரான ராகவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் இரண்டே படங்களில் தான் நடித்தார். ஒன்று ‘எல்லோரும் வாழ வேண்டும்’, மற்றொன்று ‘அழகு நிலா’. இதில் ‘அழகு நிலா’ அவரது கடைசி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை அவரது கணவர் ராகவன் தயாரித்து, இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு முழுமையாக திரையுலகை விட்டு விலகிய மாலினி, அதன் பிறகு நடிக்கவில்லை.

எம்ஜிஆர் உடன் ‘சபாஷ் மாப்பிள்ளை’, சிவாஜியுடன் ’சபாஷ் மீனா’ என இரண்டு வித்தியாசமான படங்களில் நடித்த மாலினி, ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் 50 மற்றும் 60களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக என்.டிராமராவ், அக்னி நாகேஸ்வரராவ், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், பாலாஜி உள்ளிட்டவர்களுடன் மாலினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.