ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவபர் ஐயப்பன் தான். சுவாமிக்கு இருமுடிகட்டி விரதம் இருக்கும் பக்தர்களும், கன்னி சாமி என்று முதல் முதலாக செல்லக்கூடிய பக்தர்களும் சரி…அவர்கள் பாடும் பாடல்கள் நம் மனக்கவலைகளைப் போக்கி இதமான மருந்தாக அமைந்து அளவில்லா ஆனந்தத்தைத் தந்தருளும்.

சபரிமலை செல்ல விரதம் இருக்கும் போது நம் உள்ளமெல்லாம் சுத்தமாகி அனைவரிடத்திலும் அன்போடும் பண்போடும் நடந்து கொள்ள ஒரு பயிற்சியாக இந்த விரத நாள்கள் அமைகிறது. அதேபோல் அங்கு செல்லும் போது நம் கால்களுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும், மனதுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக அமைகிறது.

சாமியே ஐயப்போ…ஐயப்போ சாமியே…பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை…சாமியே…ஐயப்போ…ஐயப்பா சாமியே…என்று சரண கோஷம் முழங்க பக்தர்கள் பாடும் பாடல்கள் நம் செவியைக் குளிர வைக்கும்.

கேரளத்தில் உள்ள ஐயப்ப சுவாமி தமிழகத்தில் பிரபலமானது எப்படி? விரதநாள்களை பக்தர்கள் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போமா…

தண்டகாருண்யவனத்து மகரிஷிகளுடைய ஆணவத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நாராயணர் ஜெகன் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சாடனாராகவும் வருகின்றார்.

அப்போது இருவருடைய ஜோதியும் ஒன்று சேர்கிற போது ஜோதி பிளம்பிலிருந்து ஜோதி சொரூபமாக வெளிப்பட்டவர் தான் ஆனந்தமயமாக ஐயப்பன். ஹரிக்கும், சிவனுக்கும் மகனாக ஆனந்த ஜோதியில் இருந்து வெளிப்பட்டவர் ஐயப்பன். அந்தத் தெய்வத்தைத் தான் சபரிமலையில் வழிபடுகிறோம்.

பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கும் இந்தத் தெய்வம் நமக்கு யோகமுத்திரை அணிந்து சின்முத்திரை ரூபமாகக் காட்சி அளிக்கிற தெய்வம் ஐயப்பன்.

இவரை வழிபட்டால் நமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறிவிடும். நெய் அபிஷேகத்தை ஏற்று பக்தர்களின் பிரச்சனைகளை எல்லாம் ஆனந்தமயமாக இருந்து தீர்த்து வைக்கிறார்.

பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை வழிபட சபரிமலை செல்வர். மாதந்தோறும் சென்றும் வழிபடலாம். ஆரம்பத்தில் 60 நாள் மாலை போட்டு விரதம் இருப்பார்கள்.

swami Iyappa
Swami Iyappa

ஒரு காலத்தில் பந்தள மன்னனுக்கு வளர்ப்பு மகனாக இருந்து பந்தள தேசத்துல ஐயப்பன் வந்த காரணத்தினால் கேரள மக்களுக்கு மட்டும் தெரிந்த தெய்வமாக ஐயப்பன் இருந்தார். தமிழகத்திற்கு இவரை அறிமுகப்படுத்தியது நவாப். எஸ்.ராஜமாணிக்கம். அவர் தான் ஸ்ரீஐயப்பன் என்ற நாடகத்தை நடத்தி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த கம்பெனியில் இருந்தவர் தான் நடிகர் நம்பியார்.

இவர் வாழ்நாள் முழுவதும் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தார். அதன்பிறகு இதை 48 நாள்கள் என்று ஒரு மண்டல விரதமாக இருந்தனர். அதன்பிறகு 30 நாள்களாக விரதம் இருந்தனர். அதன்பிறகு 24 நாள்கள் என அரை மண்டலமாக விரதம் இருந்தும் வந்தனர். ஒரு மண்டலம் விரதம் இருப்பது சாலச்சிறந்தது. இது அவரவர் வசதியைப் பொருத்தது.

இது ஒரு உல்லாசப் பயணம் கிடையாது. இது மலை மேல் உள்ள கோவில். வாகன வசதி கிடையாது. இங்கு செல்ல அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மனிதன் தன்னைத் திருத்திக்கொண்டு ஒழுக்கத்துடன் வாழும் பக்குவ காலத்தையே விரதம் தருகிறது.

காலையில் எழுந்ததும் குளிர்ந்த தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். நெற்றியில் எப்போதும் சந்தனம், குங்குமம், விபூதி வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஐயப்பனுக்கு பூ போட்டு நைவேத்தியமாக பேரீச்சம்பழம், முந்திரிபருப்பு, பால் என ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

ஐயப்பனுக்கு 108 சரணம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லும்போது அடிவயிற்றில் இருந்து எழும் நாதம் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும். நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.

Iyappa
Iyappa

விரதம் இருக்க வேண்டுமானால் 3 வேளையும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் காவி உடை அணிந்து விரதம் இருக்கலாம். கன்னி சாமி என்றால் கருப்பு நிறத்தில் ஆடை அணியலாம். காலணி அணியக்கூடாது.

மாலை போட்ட நாள்களில் இருந்து எல்லோரிடமும் மரியாதையாகப் பேச வேண்டும். ஒருவரிடம் பேசுவதற்கு முன் சாமி சரணம் என்று சொல்ல வேண்டும். வேலை முடிந்து மாலை திரும்பியதும் குளித்துவிட்டு படத்திற்கு மாலை போட்டு பூஜை செய்ய வேண்டும்.

அப்போதும் சரணம் சொல்லி வழிபட்ட பிறகு தான் பூஜையை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு முடித்ததும் தரையில் புதிய பாயை விரித்து படுக்க வேண்டும். இந்த விரத காலத்தில் கட்டாயமாக பிரம்மச்சரியம் விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.