கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக கடும் கட்டுப்பாடு இருந்ததால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் ஐயப்பனுக்கு மாலை போட்டு தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம், ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குவிந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் ஐயப்பன் கோயிலில் பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெற இருப்பதால் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சபரிமலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றும் அவர்கள் சாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்து இருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து சபரிமலையில் தரிசனம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு 11.30 மணி வரை தரிசனம் நடைபெறுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களில் சபரி மலைக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் அரவணை விற்பனை ஆகியவற்றின் மூலம் சபரிமலை தேவஸ்தானத்துக்கு ரூபாய் 125 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.