உக்ரைன் யுத்தத்தால் திணறும் ரஷ்யா !! பின்னணி என்ன ?
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்தால் மேற்கு உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் ,பிரிட்டன் போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதன் காரணமாக 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் 8-15% பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று கணித்துள்ளனர்.
இதனிடையே பல்வேறு உலக நாடுகளில் அரசு சேமித்து வைத்துள்ள அன்னிய செலவு இருப்பில் சுமார் 60% ( 35, 800 கோடி டாலர்) முடக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. போர் நடத்த தினமும் பல கோடி டாலர் செலவாகி வரும் நிலையில் ரஷ்யாவில் விலைவாசி விகிதம் தற்போது 17% அதிகரித்துள்ளது.
ஆண்டிற்கு 400 கோடி யூரோ மதிப்பிலான நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்து வரும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவின் சரக்கு கப்பல், சிமென்ட், மரம், மீன்கள் இறக்குமதிக்கும் தடை விதித்தது.
இதனால் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நிலையை ரஷ்யா சந்தித்து வருவதாக ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஸுஸ்தின் கூறியுள்ளார். இந்த சூழலில் தற்போது ரஷ்யா உக்ரைன் டான்பாஸ் பகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் விரைவில் முடிவடைந்தாலும் ரஷ்ய பொருளாதரம் சீரடைய பல வருடங்கள் ஆகும் என பொருளாதார வல்லுநனர்கள் கூறி வருகின்றனர்.
