#Property Tax ரூ.2.58 கோடியை மக்களுக்கே திருப்பி கொடுத்த சென்னை மாநகராட்சி… எதற்கு தெரியுமா?
முறையாக சொத்துவரி செலுத்திய சென்னை மக்களுக்கு ரூ.2.58 கோடியை ஊக்கத்தொகையாக சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி உள்ளது. சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் குடிமகன்களிடம் இருந்து முறையாக சொத்து வரியை திரும்ப பெற சென்னை மாநகராட்சி பலே திட்டம் ஒன்றை அறிவித்தது.
அதாவது இதுவரை அரையாண்டுக்கான சொத்துவரி முதல் 15 நாட்களுக்குள் செலுத்தியவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2020 – 2023 ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது.
நேற்று வரை சொத்துவரி செலுத்திய 1.96 லட்சம் பேருக்கு ரூ.2.58 கோடி ஊக்கத் தொகையைப் பிரித்து சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. சென்னையில் மொத்தம் 12 லட்சம் சொத்துவரிதாரர்களில் 1.96 லட்சம் பேர் தங்களுக்கான சொத்துவரியை முதல் 15 நாட்களுக்குள் செலுத்தியுள்ளனர்.
இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.119 கோடி வசூல் ஆகியுள்ளது. இவ்வாறு சொத்துவரி செலுத்தியவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.2.58 கோடி ஊக்கத் தொகையை வழங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
