‘செய்யும் தொழிலே தெய்வம்’… மைல் கல்லுக்கு ஆயுதபூஜை கொண்டாடிய சாலை பணியாளர்கள்!

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய சாலை பணியாளர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுத பூஜை கொண்டாட்டப்படாத நிலையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் , மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை முதலே பூஜைக்குத் தேவையான பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி ,ஆரஞ்சு, திராட்சை, மற்றும் சந்தனம் ,விபூதி ,சூடம், சாம்பிராணி , பூ ,மாலை அலங்கார பொருட்கள் ஆகியவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கிச்சென்றனர். இதனால் நேற்று மல்லிகை பூ முதல் பழவகைகள் வரை அனைத்தின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.

இந்நிலையில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக மைல் கல்லுக்கு ஆண்டுதோறும் படையல் வைத்து சாலை பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல் மைல்கல்லுக்கு படையல் வைத்து கற்பூர தீபம் காட்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.

புலியூர், வையம்பட்டி மாநில தேசிய நெடுஞ்சாலை உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஊழியர்கள் வித்தியாசமாக மைல் கல்லுக்கு (எல்லை கல்) , வண்ணம் பூசி , வாழைமரம் கட்டி , மாலைகள் அணிவித்து, சந்தனப் பொட்டிட்டு, பொரிகடலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, சூடம் , பக்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை வாழையிலையில் படையலிட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளையும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment