ரிஷப் பண்ட் ஆறு மாதங்கள் விளையாட முடியாதா? அதிர்ச்சி தகவல்!

நேற்று கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்னும் ஆறு மாதங்கள் விளையாட முடியாது என்று வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்த நிலையில் சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியே வந்ததால் அவர் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறிய போது ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு வலது காலில் தசைநார்கள் கிழிந்து உள்ளதாகவும் வலது மணிக்கட்டில் காயம் உள்ளன என்றும் மேலும் கை மற்றும் முதுகு பகுதியில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.