இந்தியாவில் நேற்றைய தினம் மட்டும் 422 ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் சற்று அதிக வேகத்தில் பரவுவது தெரிகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை விதித்துக் கொண்டு வருகின்றன.
குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஒமைக்ரானை தடுக்க கட்டுப்பாடு விதிக்கலாம் என்று கூறியுள்ளது. பண்டிகை காலத்தில் கூட்டம் கூடி ஒமைக்ரான் பரவுவதை தடுக்க உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒமைக்ரான் பரவினால் மாவட்ட, மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் பரிசீலனை செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகளை ஜனவரி 31ம் தேதி வரை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.