இந்திய அரசாங்கம் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்களை ருமேனியா, மால்டோவா, போலந்து ஆகிய நாடுகளின் வழியாக மீட்டுக் கொண்டு வருகிறது. தற்போது வரை ஏழு விமானங்கள் உக்ரைன் நாட்டிலுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தமிழக மாணவர்கள் அங்கு 2223 பேர் சிக்கித் தவிப்பதாக காணப்படுகிறது. அதுவும் அவர்கள் ரஷ்யா வழியாக மீட்க கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி உக்ரேனின் கார்கிவ் நகரில் சிக்கித்தவிக்கும் தங்களை ரஷ்ய எல்லை வழியாக மீட்க இந்திய மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாங்கள் தங்கியுள்ள ஊரிலிருந்து ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊருக்கு 45 நிமிடத்தில் சென்றுவிட முடியும் என்று கூறியுள்ளனர். தாங்கள் படித்து வரும் வி.என்.கராசின் மருத்துவ கல்லூரி மூடப்பட்டுள்ளதால் உணவுக்கே வழியில்லை என்று வேதனை அளித்துள்ளனர்.
அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக வீடியோவில் மாணவர்கள் கூறியுள்ளனர். இந்திய மாணவர்களை ரயில்களில் இலவசமாக ஏற்றிச் செல்ல வில்லை, 100 டாலர் கட்டணம் கேட்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
கோவை மாணவர் பிரவீன் கார்கிவ்விலிருந்து பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோவில் இத்தகைய தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து போலந்து, ருமேனியா எல்லைகளுக்கு செல்ல வழி இல்லை என்றும் தகவல் அளித்துள்ளனர்.