கோலாகலமாக நடைபெறும் இந்தியக் குடியரசு தின விழா.. இந்திய மக்களுக்கு வாழ்த்துச் சொன்ன அமெரிக்க வெள்ளை மாளிகை
ஜனவரி 26ம் தேதியான இன்று நமது நாட்டின் 73 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 73 வது குடியரசு தின நாளான இன்று டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசியக்கொடி ஏற்றி கொடிக்கு வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு முப்படை சார்பில் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அலங்கார ஊர்தி அணிவகுப்பு டெல்லியில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இந்தியாவின் குடியரசுத் தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி அமெரிக்க அரசு சார்பில் இந்திய மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
