சிஏஸ்கே வசம் இருந்த மோசமான சாதனை.. அலேக்காக தூக்கி தோனி மானத்தை காப்பாற்றிய ஆர்சிபி..

ஐபிஎல் லீக் சுற்றுடன் வெளியேற காத்திருந்த ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய விஸ்வரூபத்தை எடுத்திருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தங்களின் பயணத்தை தொடங்கிய ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி மற்றும் லக்னோ உள்ளிட்ட அணிகளை தாண்டி ரன் ரேட் அடிப்படையில் 4 வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 3 ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக பிளே ஆப் முன்னேறி இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த அவர்கள், இந்த முறையும் அப்படியே தான் வெளியேற போகிறார்கள் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர்.

முதல் பாதி லீக் சுற்றின் முடிவில், கடைசி இடத்தில் 2 புள்ளிகளுடன் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தங்களின் கடைசி 6 லீக் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் ஒரு வேளை லீக் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இது மிகவும் கடினமான விஷயம் என்ற நிலையில் தான் அதனை சாத்தியமாக்கி அசத்தி இருந்தது பெங்களூரு.

சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி லீக்கில் அவர்கள் வென்றதை பெரிதாக கொண்டாடி தீர்த்து விட்டு, அதே வேகத்தில் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 4 லீக் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் தவித்த ராஜஸ்தான், முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் கம்பேக் கொடுத்து ஆர்சிபியின் முதல் கோப்பையை வெற்றி பெறும் கனவை தகர்த்து தூள் தூளாக்கி இருந்தனர்.

செம பில்டப்புடன் பிளே ஆப்பிற்கு முன்னேறி, அப்படியே வீட்டிற்கு நடையை கட்டி தங்களின் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதற்கு முன்பு வரை, 3 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த ஆர்சிபி, அதிர்ஷ்டம் கைகூடாமல் போனதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டிருந்தது.

7 சீசன்களாக இறுதி போட்டிக்கு முன்னேறாமல் இருந்து வந்த ஆர்சிபி, இந்த முறை அதற்கு தீர்வு கட்டும் என்ற நிலையில், மீண்டும் ஒரு முறை அது கைகூடாமல் போனது. இதனிடையே, பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே வைத்திருந்த மோசமான சாதனையை முந்தி, தங்களின் பெயரை எழுதி உள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடரில் பிளே ஆப் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக சிஎஸ்கே இருந்து வந்தது.

மொத்தம் 9 தோல்விகளை சிஎஸ்கே சந்தித்திருந்த நிலையில், தற்போது அதனை முந்திய ஆர்சிபி, 15 பிளே ஆப் போட்டிகள் ஆடி அதில் 10 முறை தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...