நம் தமிழகத்தில் தினந்தோறும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று வருகிறது. அதிலும் தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் ரேஷன் கடை பதுக்குதல் செயல் நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளை பல வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் என பலரும் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பதாகவும் தகவல்கள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் பதுக்கி வைக்கப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரிசி ஆலையில் இந்த ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டது சோதனையில் அம்பலமானது.
கே.கே.கே.டிரேடர்ஸ் அரிசி ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் 16 டன் கோதுமையும் சிக்கியது. ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்திருந்த ஆலை ஊழியர்கள் சுரேஷ்குமார் மற்றும் ஜெய்கிஷன் ராய் கைது செய்யப்பட்டனர்.
அரிசி ஆலை உரிமையாளர் கதிர்வேலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.