பக்தர்களை சுண்டி இழுக்கும் ராமேஸ்வரம் கோவில்….! 22 தீர்த்தங்களில் இவ்ளோ சக்தி இருக்கா..?!

ராமேஸ்வரம் என்றதுமே நமக்கு அந்தக் கோவிலில் பிரசித்தி பெற்ற 22 தீர்த்தங்கள் தான் நினைவுக்கு வரும். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருமே தவறாமல் இந்த புனிதமான தீர்த்தங்களில் நீராடிவிடுவர். ஒரு வாளி தண்ணீர் தான் ஊற்றுவாங்க. பத்து, பதினைஞ்சு பேர் நிப்பாங்க. நம்ம மேல பட்டாலே போதும்னு நினைப்பாங்க பக்தர்கள்.

அடுத்தடுத்து இருக்கும் இந்தத் தீர்த்தங்கள் பக்தர்களை ஈரத்துணியுடன் தொடரச் செய்கிறது. நனைந்தபடியே பக்திப் பெருக்குடன் பக்தர்கள் தீர்த்தமாடியதும் இறைவனைத் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Rameshwaram koil
Rameshwaram koil

அப்பேர்ப்பட்ட தீர்த்தங்களில் நீராடி இறைவனைத் தரிசிக்கும் பக்தர்கள் மனநிறைவுடன் வெளியே வருவதைப் பார்க்கலாம். இந்தப் புனிதமான தீர்த்தங்கள் பற்றி பலரும் அறியாத சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

மகாலெட்சுமி தீர்த்தம்

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததி இல்லாதவர் இஷ்டசித்தி அடையலாம்.

சேது மாதவ தீர்த்தம்

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ராம பிரானால் சகல லெட்சுமி காடாட்சமும், சித்த சக்தியும் பெறலாம்.

நள தீர்த்தம்

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் கடவுளின் அனுக்கிரகம் பெற்று, சொர்க்கலோக பதவி அடைவர்.

நீல தீர்த்தம்

Rameshwaram Temple
Rameshwaram Temple

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

கவாய தீர்த்தம்

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

கவாட்ச தீர்த்தம்

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

கந்நமாதன தீர்த்தம்

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

சங்கு தீர்த்தம்

ராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

சக்கர தீர்த்தம்

ராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்.

சூர்ய தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

சந்திர தீர்த்தம்

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்….

மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

சாத்யாம்ருத தீர்த்தம்

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் கோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

சிவ தீர்த்தம்

சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

சர்வ தீர்த்தம்

முதல் பிரகாரத்தில் ராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

கோடி தீர்த்தம்

இந்த தீர்த்தமானது, இராமர் லிங்கப் பிரதிஸ்டை செய்தபோது, அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர், தன் அம்பின் நுனியைப் பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம்.

இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

அக்னி தீர்த்தம்

சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews